கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>அம்பேத்கர்.

சாதாரண ஒரு படைவீரனின் மகனாக, வரலாற்று வார்த்தைகளால் ஒடுக்கப்பட்ட குலத்தில் பிறந்து, இந்தியாவின் ஈடு இணையற்ற அறிஞராக, சாதி வெறியின் தலை மேல் சம்மட்டி அடிகொடுத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்கு புது வெளிச்சம் தந்த புரட்சி வீரனாக மறைந்த அம்பேத்கரின் வாழ்வில் எதிர்கொண்ட வேதனைகளின் சரித்திரம் இனி வேறு எவராலும் நினைத்துப் பார்க்க முடியாதது.

சிறுவயதில், பள்ளியிலும் மழைக்கு ஒதுங்கிய வீட்டிலும் பட்ட அவமானங்களினால் அன்று மட்டும் முடங்கியிருந்தால் இன்றைய இந்தியாவில் ஒடுக்கப்பட்ட மக்களின் நிலை எப்படியாக இருக்கும் என ஒருமுறை யோசித்துப் பாருங்கள். அன்று அவரை சுற்றிச் சூழ்ந்திருந்தது அடர் இருட்டு, கடைத்தேறவே வழியில்லாமல் சாதி வெறியர்களால் உருவாக்கப்பட்ட இருட்டு. அப்போது அவருக்கு முன் இருந்த ஒரே தூரத்துவெளிச்சம் கல்வி. கண்களை இறுக மூடி தளராத நெஞ்சுரத்துடன் அந்த வெளிச்சத்தை மட்டுமே பற்றுக்கோடாக்கி அவர் நடை பயின்றதன் பலன் இன்று லண்டன் மியூசத்தில் பெருமைப்படத்தக்க அறிஞர்களின் வரிசையில் கார்ல் மார்க்ஸுக்கு இணையான இடத்தில் அவரைப் புகைப்படமாக மாட்டப்படும் அளவுக்கு உயர்த்தியுள்ளது.
அரசியல், சமூகம், சட்டம், பொருளாதாரம், தத்துவம், வரலாறு, வணிகம், கல்வி, சமயம் என சகல துறைகளிலும் அசாத்தியமான அறிவாற்றலும், எழுத்து வன்மையும், மேதமையும் கொண்டிருந்த இதுவரையிலான இந்தியாவின் ஒரே அறிவுலக நாயகன் அம்பேத்கர் மட்டுமே. அப்படிப்பட்ட மேதை வேறு எந்த நாட்டில் பிறந்திருந்தாலும் கணக்கில்லாத விருதுகளைத் தந்து அந்த நாட்டின் அரசாங்கம் பெருமைக் கொண்டிருக்கும்.
ஆனால், அப்பேர்ப்பட்ட தலைவருக்கு, 'பாரத ரத்னா' விருது கொடுக்கப்பட்டதே அவர் இறந்து இருபத்தைந்து ஆண்டுகள் கழிந்த பிறகுதான் என்பது நாம் அனைவரும் வருத்ததோடு கவனத்தில் கொள்ளவேண்டிய விஷயம்.

எந்த நாட்டின் அரசியல் சாசன சட்டத்தை வடிவமைக்க அம்பேத்கர் அல்லும் பகலும் அயராது வியர்வை சிந்தினாரோ அந்தச் சட்டங்களை செயல்படுத்தும் அந்த நாட்டின் நாடாளுமன்ற கட்டடம் அவரை தேசத்தின் சிற்பியாக அங்கீகரிக்க மனமில்லாமல் அவரது புகைப்படத்துக்கு அனுமதி மறுத்து வந்தது. பாரதப் பிரதமராக வி.பி.சிங். பதவி ஏற்று கட்டளை இட்ட பிறகுதான் அந்தத் தடையும் விலகி நம் நாடாளுமன்றம் தன் கதவுகளைக் திறந்து வழிவிட்டது.

(இன்றும் கிராமப்புற மக்கள் தங்களின் ஒடுக்கப்பட்ட நிலையிலிருந்து விடுபட்டு கொஞ்சமேனும் பொருளாதார சுவாசக் காற்றை சுவாசிக்க காரணமான, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மை சமூகங்களுக்கு இட ஒதுக்கீட்டை தன் ஆட்சிக் காலத்தில் அமுல்படுத்தியவர்தான் திரு.வி.பி.சிங் அவர்கள்)

இவை அனைத்துக்கும் சிகரமாக இருக்கும் இன்னொரு முக்கியமான விஷயம் அம்பேத்கரின் வாழ்க்கை வரலாற்றை மையாமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படத்துக்கு உண்டான நெருக்கடி...! இயக்குனர் ஜாபர் படேல் இயக்கத்தில் என்.எப்.டி.சி. தயாரிப்பில் உருவான அந்தத் திரைப்படம் கூட தற்பொழுதுதான் வெளிவந்து சில நாட்களில் ஆதிக்க சாதியின் அழுத்தத்தில் திரையரங்கில் இருந்து தூக்கப்பட்டது.
வாழ்நாள் முழுவதும் எந்த தேசத்தின் உண்மையான அகவிடுதலைக்காகப் போராடினாரோ அந்த தேசத்தில் அவருக்கான முழுமையான மதிப்பும் மரியாதையும் அங்கீகாரமும் கிடைப்பதற்க்குத்தான் எத்தனை தடங்கல்கள், எத்தனை தடைகள்!

இவையனைத்தையும் கடந்து இதே தேசத்தில் இன்னொரு புறம் உலகம் வியக்கும் ஒரு மகத்தான பெருமையும் அவருக்கு உண்டு. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை இந்தியாவின் 6 லட்சம் கிராமங்களிலும் இன்று நின்றுகொண்டிருக்கும் அவரது சிலைகளின் சாதனை, உலகின் வேறு எந்தத் தலைவருக்கும் இல்லாத பெருமைகளில் ஒன்று. ஆனால், எண்ணிக்கையில் 6 லட்சமாக இருந்தாலும் அவை இரண்டாகப் பிளவுண்டு 12 லட்சம் கிராமங்களாகவே இந்தியா இன்றும் காணப்படுவதுதான் மிக மோசமான வேதனை!

நூல்: அம்பேத்கர் வாழ்க்கை வரலாறு.
ஆசிரியர் அஜயன் பாலா.
விகடன் வெளியீடு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...